Pages

Saturday, October 30, 2010

பழங்களும் அதன் பயன்களும்

பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பழங்கள் மிக வேகமாக சீரணமாகக் கூடியவை. இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது. இல்லையெனில், மற்ற உணவுகளை உண்ணத் தொடங்குமுன் பழங்களைச் சாப்பிட வேண்டும். வேறு எதையாவது சாப்பிட்டபின் பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது.

மாம்பழம்: 'மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்' என்பது பழமொழி. கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனியில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்தில் மிக நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது.

பலா: தமிழகத்தில் முக்கனிகள் என்று சிறப்பித்துக் கூறப்படும் மூன்று கனிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பலா. அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலியை உண்டாக்கும் என்று கருதப்படும் பலாப்பழத்தில் விட்டமின் ஏ,சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. பலாக்கொட்டையின் விட்டமின் பி1 மற்றும் பி2 அடங்கியுள்ளன. நன்கு பழுத்த பலாச்சுளைகளை மட்டுமே உண்ணவேண்டும், பழுக்காத பலாப்பழம் மற்றும் சமைக்காத பலாக்கொட்டையைச் சாப்பிடுவது செரிமானத்தைப்பாதிக்கக்கூடியது.

வாழை: முக்கனிகளில் மூன்றாவதாகக்குறிப்பிடப்படும் வாழை 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது' என்ற பழமொழியைப் போல, விலை மலிவானதாக, ஏழைமக்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதாக இருப்பினும் பயன்களில், அடங்கியுள்ள சத்துக்களில் மற்ற பல பழங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை. மூலநோயினையும் மலச்சிக்கலையும் எளிதில் தீர்க்கக் கூடியதான இப்பழம், அனைத்து விட்டமின்கள், தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக ஏராளமான பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. கண்பார்வைக்கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது என்று இப்பழம் கருதப்படுகிறது. வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் உடல் பருமனை அதிகப்படுத்தும் என்பதால், எடைக்குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது.

பப்பாளி : பப்பாளியில், பழச்சர்க்கரைகளான குளுகோசும், ஃபிரக்டோசும் சம அளவில் காணப்படுகின்றன. நன்கு கனிந்த பப்பாளியில் ஏராளமான விட்டமின் சி, விட்டமின் ஏ, குறைந்த அளவில் விட்டமின் பி1, பி2 மற்றும் செரிமானத்துக்கு உதவும் பப்பாயின் என்ற நொதியப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், செரிமானமின்மை இவற்றுக்குக்கு அருமருந்தாகத் திகழும் பப்பாளி, கல்லீரல், கணைய மற்று சிறுநீரக நோய்களைக்கட்டுப்படுத்துவதுடன், பெண்களுக்கு மாதவிலக்கின் பொழுது ஏற்படும் சிக்கல்களைப் போக்கவும் உதவுகிறது. பழுக்காத பப்பாளியைச் சாப்பிட்டால், குடல்புழுக்கள் வெளியேறும். இதில் உள்ள கார்பின், பைப்ரின் போன்றவை இதயத்திற்கும், இரத்தம் உறைதலுக்கும் துணைபுரிகிறது.

மாதுளை: இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் துணை புரிகிறது. உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது. இதய நோய்களைக்கட்டுப்படுத்துவதிலும், கொழுப்புச்சத்தினைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றும் மாதுளை, பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தது.

ஆப்பிள் : 'An apple a day, keeps the Doctor away' என்னும் ஆங்கிலப்பழமொழி, ஆப்பிளின் பெருமையை விளக்கும். இதில் விட்டமின் சி குறைவுதான் எனினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிளில் அடங்கியுள்ள சில வேதிப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கக்கூடியவை. இது புற்றுநோயினைக்கட்டுப்படுத்தக்கூடியது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கலோரி குறைவு (Negative Calorie) என்பதால் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகை வேதிமங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதால், அல்சைமர், பார்கின்சன் நோய்களில் இருந்தும் ஆப்பிள் சாப்பிடுவது மூலம் விடுபடலாம்.

திராட்சை: கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் திராட்சையில் பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் நீராலும், மாவுப்பொருட்கள் மற்றும் சியல் தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாவும் உள்ளது. திராட்சையில் ஃபிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைடிரேட் மற்றும் மாலிக் அமிலம், சிட்ரிிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் முதலியனவும் அடங்கியுள்ளன. இது இரும்புச்சத்து அதிகம் உள்ளமையால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் மாதாந்திரத்தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலம் தருகிறது. அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை மட்டுமே உண்பது நல்லது, திராட்சை எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியைத் தருவதுடன், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவுகிறது.

அருமையான ஆரஞ்சு: சிட்ரஸ் எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஆரஞ்சு இயற்கை நமக்களித்த சிறந்த பரிசுகளில் ஒன்று. உடல்நலத்தைப் பேணுவதிலும் இதன் பங்கு மகத்தானது. இதன் சுவையோ அனைவரையும் ஈர்க்கக் கூடியது. சீன நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட இக்கனி, உலகின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

ஆரஞ்சில் உள்ள சர்க்கரைப்பொருள் உடலில் உடனடியாகக் கலந்து, தெம்பளிக்கக்கூடியது. உடலில் உடனடியாக உஷ்ணத்தையும், சக்தியையும் தோற்றுவிக்க வல்லது. ஆரஞ்சு சொறி-கரப்பான் இவற்றைப்போக்க வல்லது. உடலுக்கு ஊட்டமளிக்கவல்லது. இதயத்தைப் பலப்படுத்தக்கூடிய இது, பற்கள் தொடர்பான வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது. குறிப்பாக ஈறுகளைப் பாதிக்கும் ஸ்கர்வி என்ற நோய் (விட்டமின் சி குறைபாட்டினால் தோன்றுவது) ஆரஞ்சினைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குணமாகிறது. பொதுவான சளித்தொல்லைகள், இன்ஃப்ளூயன்சா என்ற காய்ச்சல் இவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

காய்ச்சலின் பொழுது கொடுக்கக்கூடிய உணவுவகைகளில் முக்கிய இடம் பிடிப்பது ஆரஞ்சுச் சாறு. குறிப்பாக டைபாய்டு, அம்மை, காசநோய் இவற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக ஆரஞ்சுச் சாறு திகழ்கிறது. உடலின் ஆற்றலைத் தூண்டுதல், சிறுநீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்துதல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் விரைவில் நோய் குணமாகக் காரணியாதல் என ஆரஞ்சின் செயல்பாடு சிறப்பானதாக விளங்குகிறது. கபம், சளி இவற்றினை வெளிக்கொணரவும் ஆரஞ்சு உதவுகிறது.

வயிறு மந்தமாக இருத்தல், மலச்சிக்கல் இவற்றுக்கும் அருமருந்தாக இருப்பது ஆரஞ்சு. கால்சியம், விட்டமின் சி இவை அதிகம் காணப்படுவதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் ஆரஞ்சு வலுவூட்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் 'ஸ்கர்வி மற்றும் ரிக்கெட்ஸ்' போன்ற உடல்நலக்குறைபாடுகளுக்கு தினம் ஆரஞ்சுச் சாறு 15 முதல் 120 மி.லி வரை கொடுப்பது பயன் தரும்.

ஆரஞ்சு ஒரு சிறந்த அழகு சாதனப்பொருளாகவும் திகழ்கிறது. இதன் தோலினைக் கல்லில் தண்ணீருடன் சேர்த்து உரைத்துப் பூச, பருக்கள், வேனல் கட்டிகள் முதலியவை மறையும். ஆரஞ்சுத் தோலினைக் காயவைத்துப் பொடி செய்து, பாசிப்பயறுப்பொடி அல்லது கடலை மாவுடன் கலந்து பூசிவர சருமம் பொலிவினைப் பெறும். மின்னும் மிருதுவான சருமத்தை அடைய விரும்புபவர்கள், ஆரஞ்சுச் சாற்றினை சிறிது தண்ணீருடன் கலந்து முகத்தில் தினமும் பூசி, பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவேண்டும். சில தினங்களிலேயே முகம் பளபளப்பதை உணரலாம்.

சாத்துக்குடி: ஆரஞ்சின் இனமான சாத்துக்குடிப் பழமும் பல மருத்துவ நன்மைகளை உடையது. இது இரத்தத்தைச் சுத்தம் செய்யவும், சீரண உறுப்புகளைப் பலப்படுத்தவும், சீரணக்கோளாறுகளைச் சரி செய்யவும் வல்லது. ஆரஞ்சினைப் போலவே இதன் சாறும் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் பழைய நிலையை மீண்டும் அடையத் தேவையான சக்தித் தருவதோடு, நோய்த்தொற்று பரவாமலும் இது பாதுகாக்கிறது.

தாகம் தீர்க்கவரும் தர்பூசணி: முலாம்பழத்தின் வகையைச் சேர்ந்த தர்பூசணி ஆப்பிரிக்க நாட்டின் தென்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. மேற்புறம் பெரும்பாலும் பச்சையாகவோ, சில பழங்களில் மஞ்சளாகவோ இருக்கும். உள்புறம் சிவப்பான, இனிப்பான சதைப்பற்றான பகுதியை உடையது. பூசணி, பரங்கி போன்றவையும் இதன் இனத்தைச் சேர்ந்தவையே!

தர்பூசணியில் ஆறு சதவீதம் சர்க்கரையும், பெரும்பாலும் நீரும் அடங்கியுள்ளது. இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் என்னென்ன தெரியுமா? விட்டமின் A, B1,B3, B6, B9 மற்றும் C ஆகியவை. எனவே, மாலைக்கண் நோய், கண்பார்வைக்குறைபாடு இவைகளுக்கு சிறந்த மருந்தாக தர்பூசணி விளங்குகிறது. விட்டமின் பி, உடலின் வளர்சிதை மாற்றங்களைக்கட்டுப்படுத்துகிறது, நரம்பு மண்டலங்கள் சரிவரச் செயல்பட உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக்கூட்டுகிறது. ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.

உலகின் வெப்பப்பகுதிகளான ஆப்பிரிக்கா, ஆசியாக் கண்டங்களைச் சேர்ந்த மக்களைக் காப்பாற்றவென்றே இயற்கை அன்னை படைத்தளித்த பழம் இது. வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் வலிப்பு நோய், இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வாதநோய் இவை தர்பூசணியைத் தொடர்ந்து உட்கொள்ளும்பொழுது ஏற்படுவதில்லை.

தர்பூசணியில் உடலுக்கு இன்றியமையாத தாதுப்பொருட்களான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. நிறைவுறாக் கொழுப்பு அடங்கியுள்ளதால் உடல் எடை அதிகரிப்பைக் கட்டுக்குள் வைக்கிறது. உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அதிக அளவு தர்பூசணி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சிற்றலின் அமிலம், இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் காக்கிறது, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தி சரியாக்குகிறது.

இனிப்புச் சுவையுடன் இருந்தாலும், இதில் சர்க்கரைச் சத்து கொஞ்சம் குறைவுதான். மேலும் பொட்டாசியம் முதலிய தாதுப்பொருட்கள், இரத்தத்தில் இன்சுலின் அளவைச் சரியாக்கவும், இரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக, வயிறு நிரம்பிய உணவையும் அளிக்கின்றதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கும் ஏற்ற பழம் இது.

தர்பூசணி அதிக நீர்ச்சத்து உள்ள பழமாகையால், சிறுநீரகத்திற்கும் நன்மை புரிகிறது. இதன் சிவந்த சதைப்பகுதியில் உள்ள கரோடினாய்டுகள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்ற காரணியாகின்றன. குறிப்பாக லைகோபேன் என்ற காரணி புற்றுநோய் வராமல் காப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தர்பூசணி விதைகளில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இவற்றில் மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தேவையான தாதுப்பொருட்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் உள்ளன.

அதிசயப் பலன்கள் தரும் அத்திப்பழம்:

அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வல்லது. இதில் உள்ள தாதுப்பொருளான பொட்டாசியமே அதற்குக் காரணம். இன்று உலகில் அதிக மக்கள் ஆர்வமாக உண்ணும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றில் அடங்கியுள்ள சோடியமானது உயர் இரத்த அழுத்தத்தைத் தூண்டக்கூடியது. பொதுவாக அனைத்துப் பழங்களிலும் சோடியத்தை விடப் பொட்டாசியம் அதிகம் காணப்படும். குறிப்பாக அத்திப்பழத்தில் பொட்டாசியம் நிறைய உள்ளது. எனவே தினமும் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது சாலச்
சிறந்தது.

உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அத்தி ஒரு வரப்பிரசாதமே! இது நார்ச்சத்து நிரம்பிய பழம். எனவே, இது உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கவல்லது.

அதிக அளவு கால்சியமும், இரும்புச்சத்தும், மாங்கனீசும்கூட இந்தப்பழத்தில் காணப்படுகின்றன. இரும்புச்சத்து, இரத்த சோகை நோயைத் தடுக்கக்கூடியது. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்வைக் கட்டுப்படுத்த வல்லது கால்சியம். இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

மேலும், மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் மிகுந்துள்ளதால் இது மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.

இத்தனை பலன்களைக் கொடுக்கும் அத்திப்பழம், சற்று விலை அதிகமானதுதான். அதனால் என்ன? தினமும் இரண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிடுவது, ஒரு மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதற்கு ஒப்பானதாயிற்றே!

கொய்யாவில் இத்தனை பயன்களா?

ஆசியநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அதிகம் விளையும் பழம் கொய்யா. இளமஞ்சள் அல்லது பச்சையான தோல்பகுதியையும், சிவப்பு அல்லது வெள்ளை நிற சதைப்பகுதியையும் உடையது இது. மலிவான பழமான இதனைப் பலரும் அலட்சியம் செய்வதுண்டு. ஆனால், இதைப் படித்தவுடன் கொய்யா மீதான உங்கள் மதிப்பு சரசரவென உயரும்.

கொய்யாப்பழம் அதிக நார்ச்சத்து உடைய பழம். இது உங்கள் சீரண சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தைத் தக்க வைக்கிறது. அதே சமயம், மலச்சிக்கல் ஏற்படாமல் காப்பாற்றுகிறது. உங்கள் சீரண உறுப்புகள் சரியாக வேலை செய்தாலே உடலில் பல நோய்கள் அண்டாதல்லவா? அதற்குக் கொய்யா மிகவும் உதவி செய்கிறது.

முற்றாத கொய்யாக்காய் அல்லது கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வடிநீர் (Decoction) இருமல் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தக்கூடியது. கொய்யா, 'விட்டமின் சி' மற்றும் இரும்புச்சத்து நிரம்பியது. இவை இரண்டுமே, சளி மற்றும் விஷக்காய்ச்சலை எதிர்க்கக் கூடியவை.

கொய்யாவில் காணப்படும் ஆஸ்ட்ரின்ஜென்ட்கள் (ஒருவிதக் கூட்டு வேதிப்பொருள்) தளர்ந்த தசைகளை இறுக்கக்கூடியது. எனவே வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினைக் கட்டுக்குள் வைக்கவல்லது. மேலும் இந்த வேதிப்பொருள் நோய்த்தொற்றுகளை நீக்கவும் பயன்படுகிறது. கொய்யாவில் உள்ள இரும்புச்சத்து, விட்டமின் சி, கரோடினாய்டுகள் இவை அனைத்துமே சீரண உறுப்புகள் சரிவரப் பணி செய்யவும், இவற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் நீங்கவும் உதவுகின்றன.

கொய்யாவில் உள்ள ஆஸ்ட்ரின்ஜென்ட்கள் (ஒருவிதக் கூட்டு வேதிப்பொருள்), அழகு சாதனப்பொருட்களிலும் பயன்படுத்தப் படுகின்றன. தசைகளை இறுக்க இந்த வேதிப்பொருள் உதவுவதால், உடல் அழகு பெறுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குகின்றன. இதற்குக் கொய்யாவை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப் பட்ட வடிநீரைக்கொண்டு முகம் கழுவி வந்தாலும், முகத்தசைகளில் தளர்வு நீங்கி இறுகுவதை உணர முடியும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் கொய்யாவால் முடியும். அது மட்டுமல்ல. இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகாமலும், இரத்த ஓட்டம் சீராக இருக்குமாறும் கொய்யா செயல்புரிகிறது.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடைக்குறைப்பு செய்யவும், ஒல்லியாக இருப்பவர்கள் எடையை அதிகரிக்கவும் கொய்யா உதவும் என்றால் அதிசமல்லவா? அதிக நார்ச்சத்து எடைக்குறைப்பில் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள பலவிதமான சத்துக்களோ, எடை குறைவாக உள்ளவர்களுக்கு எடை கூடவும் உதவுகிறது.

விட்டமின் சி ஏராளமாகக் காணப்படுவதால், இக்கனியானது 'ஸ்கர்வி' நோயைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. இவை தவிர புற்றுநோய், பல்வலி இவற்றிற்கும் மருந்தாகச் செயல்படக்கூடியது கொய்யா.

துரியன் பழம்: தென்கிழக்கு ஆசியாவில் மிகுந்த அளவில் விளையும் பழம் துரியன் பழம். மூக்கினைத் துளைக்கும் ஒரு விதமான மணம் (துர்நாற்றம்???) உடையது இப்பழம் என்பதால் இதை முகர்ந்து பார்ப்பவர்கள் முதலில் முகம் சுளிக்கலாம். ஆனால், இதை உண்பவர்கள் இதற்கு அடிமையாவார்கள். இப்பழத்தை உண்பதால் உண்டாகும் பயன்களோ ஏராளம், ஏராளம்.

துரியன்பழத்தில் அதிக அளவு விட்டமின் பி, சி மற்றும் இ அடங்கியுள்ளது. இப்பழத்தை உண்பவர்கள் தமது உடல் நலக்குறைபாடுகளில் இருந்து உடனடியாக விடுபடுவது உறுதி. இதன் இலைகளையும், வேர்களையும் பயன்படுத்தி காய்ச்சலுக்கும் மஞ்சள் காமாலைக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இப்பழம் இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது. இதில் உள்ள மென்புரதச்சத்தானது, தசைகளை வலுப்படுத்தக் கூடியது. துரியன் பழத்தில் உள்ள 'டிரைப்டோபான்' என்ற அமினோ அமிலம் பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை இவற்றைக்குறைக்கவும், மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய 'செரோடினின்' என்ற மூளையில் உள்ள ஹார்மோனைத் தூண்டவும் பயன்படுகிறது. இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை மட்டுப்படுத்துகிறது.

துரியன் பழத்தையும் இலைகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வடிநீர் வீக்கங்களையும், சரும வியாதிகளையும் கட்டுப்படுத்தக் கூடியது.

நெல்லிக்கனி எனும் அமுதம்: அதியமானைப் பற்றிப் புகழுகையில் முதலில் சொல்வது 'அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்தவன்' என்றுதான். மலையில் விளைந்த கரு நெல்லிக்கனியானது வாழ்நாளை நீட்டிக்கச் செய்யுமென்று அறிந்ததும், அதைத் தான் உண்ணாது தமிழ் மூதாட்டிக்குக் கொடுத்தான் அதியமான். மலை நெல்லியளவிற்கு இல்லாவிட்டாலும், நமக்குச் சர்வ சாதாரணமாக கடைத்தெருவில் கிடைக்கும் நெல்லிக்கனி (காய் கூடத்தான்) பற்பல அதிசய மருத்துவக்குணங்களை உடையது.

ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவத்தில் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாகத் திகழுகின்ற நெல்லிக்கனியில் ஆரஞ்சில் உள்ளதை விட இருபது மடங்கு அதிகமான அளவில் விட்டமின் சி காணப்படுகிறது. நெல்லியின் சிறப்பம்சம் என்னவெனில், மற்ற பழங்கள் காய்கறிகளில் உள்ள விட்டமின்கள் சமைப்பதால், நறுக்குவதால் குறைவதை அல்லது அழிவதைப்போல் இதில் அழிவதில்லை. நீங்கள் பச்சையாகச் சாப்பிட்டாலும், சமைத்துச் சாப்பிட்டாலும் உங்களுக்குக் கிடைக்கும் விட்டமின்கள் அதே அளவில்தான் உள்ளன.

அதேபோல், நெல்லிமரம் எந்தவிதமான தட்பவெப்பத்திலும் வளரக்கூடியது. அதிகபட்சமாக நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ் முதல், உறைநிலை வெப்பம் வரை அனைத்து வெப்பநிலையிலும் இம்மரம் தாக்குப் பிடிக்கும்.

இக்கனியில் அறுசுவையில் நான்கு சுவைகளை (காரம் மற்றும் உப்பைத்தவிர) உணரலாம். புளிப்பு, லேசான இனிப்பு, துவர்ப்பு, கொஞ்சம்கசப்பு என எல்லாம் சேர்ந்த கலவை இதன் சுவை. இக்கனியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் நீர்ச்சத்தும், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், புரோட்டின்கள், கரோடின்கள், அபரிமிதமான விட்டமின் சி, கலவையான விட்டமின் பி, காலிக் அமிலம் என்று பலப்பல தாதுப்பொருட்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. சரகர், சுஸ்ருதர் என்ற பண்டைய ஆயுர்வேத மருத்துவ ஞானிகள் தமது நூல்களில் நெல்லிக்கனியைப் பற்றிய பல குறிப்புகளையும், பலவித நோய்களையும் போக்க நெல்லி எப்படிப் பயன்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளனர்.

நெல்லியின் பயன்கள்: நமது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தானது, இரத்தக் குழாய்களில் படிகின்றபொழுது அது மாரடைப்பு ஏற்படக்காரணமாகி விடுகிறது. ஆனால், நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் சி, இக்கொழுப்புச் சத்தைக் கரைப்பதன் மூலம், இரத்தக் குழாய்களில் அது படிவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, நெல்லியானது, மாரடைப்பைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது.

சிறிதளவு காய்ந்த நெல்லிக்காய்ப் பொடியை, சர்க்கரையும் நீரும் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைச் சீராக வைக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. இது மூளை நன்கு செயல்படவும், புத்துணர்வு பெறவும் உதவுகிறது. சுவாசக்கருவிகள் நன்கு செயல்படவும், நுரையீரல்கள் மற்றும் ஈரல்கள் சிறப்பாகப் பணிபுரியவும் இதில் உள்ள கனிமங்கள் உதவுகின்றன. சிறுநீர்ப்பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்கவும், உணவை நன்முறையில் உடலானது உறிஞ்சிக்கொள்ளவும் நெல்லி உதவுகிறது.

காய்ந்த நெல்லிக்காய்ப்பொடி, பாகற்காய்ப்பொடி மற்றும் நாவல்பழத்தை, தினமும் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் நீங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவானது சீர்படுத்தப்படும். தேனில் கலந்து நெல்லிக்காய்ப்பொடியைச் சாப்பிட்டுவர, கண்பார்வை மேம்படும். பற்கள், நகங்கள் இவை வலுவாகின்றன. இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன.

இன்றைய உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளும் குடலில் அதிக அமிலச் சுரப்பை உண்டாக்குகிறது. குடல் அழற்சி ஏற்படுகிறது. வயிற்றில் எரிவது போல் ஒரு உணர்ச்சி உண்டாகும்பொழுது, நெல்லிக்காய்ப்பொடியை, ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் சேர்த்துப் பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கக் காணலாம்.

அழகிய கூந்தல் பெறவும் உதவுகிறது நெல்லிக்கனி. நெல்லிக்காயை நீரில் ஊறவைத்துத் தொடர்ந்து தேய்த்துக்குளித்துவர, உடல் சூடும், முடி உதிர்தலும் குறையும். நெல்லிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு, ஒரு இரும்புப் பாத்திரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து, பின் தலையில் தேய்த்து சில மணி நேரம் ஊறிக்குளித்தால், நரைமுடி கருமையாகும். கூந்தல் பொலிவுபெறும்.

நெல்லிக்காய் முதிய தோற்றத்தைத் தரும் 'லிபிட்'கள் அதிகம் உற்பத்தியாகாமல் காக்கிறது. நெல்லிக்காயை பச்சையாகவோ காயவைத்தோ தொடர்ந்து சாப்பிட்டுவர, முதுமையான தோற்றம் தவிர்க்கப்பட்டு, இளமைப்பொலிவு உண்டாகும். வாழ்நாள் நீடிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது பண்டைத் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்திருந்ததை 'அவ்வை அதியமான்' கதை உணர்த்துகிறதே!

எலுமிச்சை மகிமைகள்: ஏராளமாக 'விட்டமின் சி' யையும், விட்டமின் 'பி' யின் வகைகளான 'தையமின்', 'ரிபோபிளேவின்' இவற்றையும், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவற்றையும் தன்னுள் கொண்டது எலுமிச்சை. இது இயற்கையான நோய்த்தடுப்பானாக விளங்குகிறது. காயங்களில் உள்ள பாக்டீரியாவை அழிக்கவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் உதவுகிறது.

முகப்பரு, அக்கி முதலியவை, எலுமிச்சைச் சாற்றைத் தடவுவதன் மூலம் நீங்குகின்றன. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் சுருக்கங்களை நீக்கவும் எலுமிச்சைச் சாறு உதவுகிறது. தினமும் எலுமிச்சையைச் சாறு பிழிந்து முகத்தில் தடவிக் காய்ந்ததும் குளிர் நீரால் அலம்பிவர, சில நாட்களிலேயே, முகம் பளிச்சிடுவதைக் காணலாம். எலுமிச்சைச் சாற்றில் உப்பு சேர்த்துப் பல் துலக்கிவர, பற்கள் வெண்மை பெறுவதுடன், பல்வலி, ஈறுகளில் இரத்தம் வருதல் முதலியவை கட்டுப்படுத்தப் படுகின்றன. எலுமிச்சைச் சாற்றினை முடியில் தடவி ஊறிக்குளித்துவந்தால், முடி கருமையும் பளபளப்பும் அடர்த்தியும் பெறுகிறது.

எலுமிச்சையானது, எலும்புத்தேய்வு, நீரிழிவுநோய் இவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதில் அதிக அளவு காணப்படும் விட்டமின் 'சி' யானது, சளி இருமல் தொல்லைகளில் இருந்து விடுபடவும், ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தவும் உதவி செய்கிறது. ஈரலை வலுவூட்டும் மருந்தாகவும் எலுமிச்சைச் சாறு பயன்படுகிறது.

சின்னச்சின்ன செர்ரிப்பழம்:

செர்ரிப்பழம் கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசிய நாடுகளில் பண்டைக்காலம் முதலே பயிராகி வரும் கனியாகும். புளிப்பு மற்றும் இனிப்பு என இரு சுவைகளில் கிடைக்கும் இந்தக் கனியானது, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படும். இப்பழத்தில் ஏராளமான இரும்புச்சத்து காணப்படுகிறது. காரத்தன்மையுடைய (Alkaline) பழமாகையால், இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை (Toxic waste) வெளியேற்றவும், சிறுநீரகம் மற்றும் கல்லீரலைச் சுத்தம் செய்யவும் வல்லது.

சிவப்பு நிறச் செர்ரிப்பழமானது, ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த காரணியாகும். இது ருமாடிக் ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டுவலிக்கும், நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வலியைக்குறைக்கவும் வல்ல இக்கனி, புற்றுநோயைத் தடுப்பதிலும் பெருமளவு பங்கு வகிக்கிறது. பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செர்ரியில் உள்ள 'Anthocyanin' களே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். இவையே செர்ரிப்பழத்திற்கு நிறமளிக்கின்றன. இனிப்புச் செர்ரியில் இருப்பதை விட, புளிப்பான தன்மையுடைய செர்ரியில், இந்த வேதிப்பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய்க்கு மட்டுமில்லாமல், வாதம், மாரடைப்பு இவற்றுக்கு எதிராகவும் போராட வல்லது. அது மட்டுமல்ல, செர்ரிப்பழம் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக்குறைக்க வல்லது.

செர்ரிச்சாறும் ஏராளமான மருத்துவக்குணங்களை உடையது. உடலுக்குத் தேவையான பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கியது. 250 மி.லி. செர்ரிச்சாறு குடித்தால், கிட்டத்தட்ட 25 வகையான பழங்களையும், காய்கறிகளையும் உண்ட பலன் கிடைக்குமாம். பட்டாணி, தக்காளி, தர்பூசணி, காரட், வாழைப்பழம் இவற்றை ஐந்து முறை உட்கொண்டதற்கு ஈடாகுமாம் செர்ரியின் 250 மி.லி. சாறு. அப்படியானால் அதன் பலன் எத்தகையது என்று பாருங்கள். குட்டிக்குட்டியாக, கருஞ்சிவப்பாக இருக்கும் இந்தப் பழத்திற்கு இவ்வளவு மகிமையா? வியப்பாக உள்ளது இல்லையா?

பலன் மிகு ப்ளம்ஸ்:

செர்ரிப்பழத்தின் கிளைக்குடும்பத்தைச் சேர்ந்ததுதான் ப்ளம்ஸ். ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ப்ளம்ஸ், சிவப்பு நிறம் மட்டுமில்லாமல், கருநீலம், ஊதா, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களிலும் கிடைக்கக் கூடிய இந்தப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே இது சீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சாறு நிறைந்த புதிய ப்ளம்ஸ் உண்பவருக்குப் புத்துணர்ச்சியூட்ட வல்லது. உலர வைத்த ப்ளம்ஸ் 'Prune' என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சுவை மிக்கதே ஆகும்.இதில் அனைத்து வித விட்டமின்களும், (குறிப்பாக விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ) அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் முதலிய தாதுப்பொருட்கள் மிக அதிகமான அளவும், மற்ற தாதுக்களான இரும்பு, துத்தநாகம், செலெனியம் முதலியவையும் அடங்கியுள்ளன. இவை தவிர பலவிதமான அமினோஅமிலங்களும் ப்ளம்ஸில் காணக்கிடைக்கிடைக்கின்றன.

இப்பழத்தில் 'நியோக்ளோரோஜெனிக்' மற்றும் 'க்ளோரோஜெனிக்' அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவை என்பதால், உடலுக்கு மிகுந்த நன்மையளிக்க வல்லவை. இவை நரம்பு மண்டலத்துக்கும், செல்களில் காணப்படும் சவ்வு போன்ற பொருட்களுக்கும் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்கக் கூடியது. இரும்புச்சத்து நிறைந்த இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. இக்கனியில் காணப்படும் 'விட்டமின் ஏ' கண் பார்வையைக் கூர்மையாக்கவும், கண் தொடர்பான குறைபாடுகள் வராமல் தடுக்கவும், தொற்று ஏதும் நேராமல் பாதுகாக்கவும் செய்கிறது.

மேலும் ப்ளம்ஸ் பழமானது கான்சருக்கு எதிராகப் போராடக்கூடிய திறனுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும், கட்டிகளையும் களையவல்லது இக்கனியில் உள்ள வேதிமங்கள். அது மட்டுமல்ல, இதில் உள்ள சில சுத்திரிக்கும் காரணிகள், இரத்தத்தில் உள்ள அசுத்தத்தை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் காரணமாக, இதய நோய் வராமலும் தடுக்கிறது.

'விட்டமின் சி' யை அதிக அளவு பெற்றிருக்கும் இக்கனி, சாதாரணச் சளி, இருமல், இன்ஃப்ளூயன்ஸா என்னும் காய்ச்சல், ஆஸ்த்மா இவற்றுடன், ருமாட்டிக் ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்புத்தேய்வு நோய் இவற்றையும் அண்டவிடாமல் தடுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

சிறப்பான ஸ்ட்ராபெர்ரி:

இதய வடிவில் அமைந்துள்ள அழகான பழம் ஸ்ட்ராபெர்ரி. தென் மற்றும் வட அமெரிக்காவில் அதிக அளவு பயிராகும் இப்பழத்தின் சொந்த ஊர் சிலி ஆகும். இது ஏறத்தாழ பதினைந்து வகைகளில் கிடைக்கிறது.

அதிக அளவு 'விட்டமின் சி'யும், பழச்சர்க்கரையும் அடங்கிய பழம் இது. இதன் சாறு ஊட்டச்சத்து மிகுந்த பானமாகும். செர்ரிப்பழத்தைப் போலவே கார்த்தன்மை அடங்கிய இப்பழமானது, உடல் உள்ளுறுப்புக்களை, குறிப்பாக சீரண உறுப்புக்களைச் சுத்தம் செய்ய வல்லது. இக்கனியில் அதிக அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. கண் பார்வைப்பாதுகாப்பு ஸ்ட்ராபெர்ரியின் மற்றொரு பயனாகும்.

இக்கனி, கீல்வாதம், மூட்டுவலி இவற்றைப் போக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் இவற்றுக்கு எதிராகப் போராடும் இதன் மருத்துவக்குணங்கள், மூளையானது சரிவர இயங்கவும் உதவுகிறது. விட்டமின் சி காணப்படும் மற்ற பழங்களைப் போல இதுவும் சளி, காய்ச்சல் இவற்றைப் போக்கப் பயன்படுகின்றது.

மிகச்சிறந்த மணமும், நிறமும், சுவையும் நிரம்பிய இக்கனி, உணவுப்பொருட்கள் கெடாமல் காக்கவும் பயன்படுகிறது.


Wednesday, June 16, 2010

"இதுவல்லவோ நீதி!’’



இரவு மணி 9: போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் கம்பெனியின் குழாய்களை தண்ணீரில் சுத்தம் செய்யும் பணி ஆரம்பமாகிறது.

இரவு மணி 10: சுத்தம் செய்யும் தண்ணீர் டேங்க் எண் 610 &ல் எதிர்பாராதவிதமாக நுழைய அது தன் வேலையைக் காட்டத் துவங்குகிறது.

இரவு மணி 10.30: உள்ளே நுழைந்த தண்ணீர் டேங்க்கில் இருந்த ரசாயனப் பொருட்களோடு கலந்து நச்சு வாயுவாக மாறி அது வெளியேறுவதற்காக வைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக வெளியேறத் துவங்குகிறது.

இரவு மணி 12.30: தொழிற்சாலையின் உள்ளே இருக்கும் அபாய சங்கு நீண்ட ஓலத்தை ஒலித்தபடி தனது மூச்சை நிறுத்திக் கொள்கிறது.

இரவு மணி 12.50: அபாய சங்கின் ஒலியைக் கேட்ட தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள்.

ஆனால் அது பற்றி எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போபால் நகரம்.

அவ்வளவுதான்......

அதன் பிறகு வந்த ஒவ்வொரு கணமும் கொடூரமானவை.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெதில் ஐசோ சயனைட் நச்சு வாயு நகரைச் சூழும்போது எல்லாமே கையை மீறிப் போயிருந்தது.

அந்த நச்சுப்புகையை மக்கள் சுவாசிக்கத் தொடங்கிய மறு நொடியே மூச்சுத்திணறலுக்கு ஆளாகிறார்கள்...

அடுத்து கடும் இருமலும் வாந்தியும் அவர்களைப் புரட்டி எடுக்கிறது...

கண்கள் தீயெனப் பற்றி எரிகின்றன எரிச்சலில்...

வீட்டுக்குள் மழலைகளோடு படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? என எதுவும் புரிபடாமல் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வருகிறார்கள்.

ஓட ஓட துரத்துகிறது நச்சுவாயு. ஓடியவர்கள் கும்பல் கும்பலாக செத்து விழுகிறார்கள் வீதிகளில்.

செத்து விழுந்தவர்கள் போக மற்றவர்கள் இரவு இரண்டு மணி வாக்கில் ஹமீதையா மருத்துவமனையை அடைய அங்கேயே பலபேருக்குப் பறிபோகிறது கண்பார்வை.

வாயில் நுரை தள்ளியவாறும், மூச்சுத் திணறியபடியும் குற்றுயிராகிப் போன ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகுதான் ஒலிக்க ஆரம்பிக்கிறது தொழிற்சாலைக்கு வெளியில் இருந்த அபாயச்சங்கு.

ஒருவழியாக காலை நாலு மணியளவில் நச்சுவாயு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இது நடந்தது டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி. ஆண்டு : 1984.

மறுநாள் காலை ஏழு மணிக்கு போலீசின் ஒலிபெருக்கிகள் ஒலிக்கின்றன : எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டன.

இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஆறு ஆண்டுகள்.

அது சரி... போலீசின் ஒலிபெருக்கிகள் சொன்னனவே ‘‘எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டன”

அந்த ‘எல்லாமே’ என்றால் எவையெவை?

அந்தக் கொடூரச் சம்பவம் நடந்த வேளையில் செத்து மண்ணோடு மண்ணாக சுண்ணாம்பாகி விழுந்தவர்கள் மட்டுமே இருபதாயிரம் பேருக்கு மேல்.

பல லட்சம் பேர் தீராத புற்றுநோய்க்கும், நுரையீரல் நோய்களுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

கண்பார்வை பறிபோனவர்கள் ஏராளமானோர்.

முதலில் ஓரிரு நாட்களுக்கு செத்தவர் போக மற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புதிதாக அனாதையாக்கப்பட்டவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன.

விதவைகள் ஆக்கப்பட்டவர்-களுக்கான பென்ஷன் மாதம் ரூ 200/-& அளிக்க உத்தரவிடப்பட்டது. பிற்பாடு ‘பெரிய மனசு’ பண்ணி அது 750/- ஆக உயர்த்தித் தரப்பட்டது.

மாத வருமானம் 500 ரூபாய்க்குள் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ‘நிவாரணம்’ ஆக 1500 ரூபாயை அள்ளி வழங்கியது அரசு.

அதுவும் “சந்தேகத்துக்கு இடமின்றி விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்தான்” என்று மருத்துவரிடம் கியூவில் நின்று சான்றிதழ் வாங்கி வந்தவர்களுக்கு.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் பாதிக்கப்பட்டதாக ஒருவர்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல்.

1984-ல் நடந்த இந்தக் கொடூரத்துக்கு ஆறு ஆண்டுகள் கழித்து விபத்துக்கு முன் பிறந்தவர்களுக்கு இடைக்கால ‘நிவாரணத் தொகை’யாக 200 ரூபாயை வாரி வழங்கினார்கள் வள்ளல்கள். அதுவும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகு. இறந்தவர்கள் போக விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறுதி இழப்பீடாக 25,000 ரூபாயையும்... விஞ்ஞானத்தின் ‘வளர்ச்சிக்காக’ தங்கள் உயிரை ‘அர்ப்பணித்து’க் கொண்டவர்களின் குடும்பத்துக்கு 62000 ரூபாயையும் கருணை உள்ளத்தோடு அளித்தார்கள்.

இந்தக் கொடூரத்தைக் கண்டு கோபம் கொண்டு போபால் நகரையே ஒரு “ஞிவீsஜீஷீsணீதீறீமீ சிவீtஹ்” என்று எழுதினார் தமிழகத்தின் இலக்கியவாதியும் மனித உரிமை ஆர்வலருமான நண்பர் நாகார்ஜுனன்.

ஆம்.

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தேநீர்க் குவளைகளைப் போல...

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஊசி போடும் சிரிஞ்சுகளைப் போல...

போபால் நகரமும் பயன்படுத்திவிட்டு குப்பைக் கூடையில் வீசப்பட்ட ஒரு நகரம்தான்.

இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஞ்ஞான பலிகளுக்கான ‘தீர்ப்புதான்’ இந்த வாரம் ஆற அமர வந்திருக்கிறது.

வந்த அந்தத் தீர்ப்பும் இந்தத் திருப்பலிகளுக்குக் காரணமானவர்களைக் ‘கொடூரமாக’ தண்டித்து ‘நீதியை’ நிலை நாட்டி இருக்கிறது.

இருபதாயிரம் பேருக்கு மேல் சாகடிக்கப்-படுவதற்கும்...

ஐந்து லட்சம் பேருக்கு மேல் நிரந்தர நோயாளிகளாக ஆக்கப்பட்டதற்கும்...

730 நாட்கள் ‘கடும் தண்டனை’ அளித்து தீர்ப்பு வழங்கியதோடு ஜாமீனும் வழங்கியிருக்கிறார் ‘கனம் மாஜிஸ்ட்ரேட்’ அவர்கள்.

அதுவும் அன்றைக்கு யூனியன் கார்பைட் கம்பெனியின் தலைவராக இருந்த... இத்தனை லட்சம் பேரை நடைபிணமாக்கிய... வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாமல்!

இதுவல்லவோ நீதி!

1984 தொடங்கி 2010 வரைக்கும் துப்புக்கெட்ட இந்த இந்திய அரசும் மானம் கெட்ட அமெரிக்க அரசும் சேர்ந்து தேடோ தேடென்று தேடுகிறார்களாம் அந்த ஆண்டர்சனை.

இருபத்தி ஆறு ஆண்டு-களுக்கு முன்னர் கைதான ஆண்டர்சனை ஆறே மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை செய்து தனி ஜெட் விமானத்தில் வழியனுப்பி வைத்தவர்கள் யார்? அப்பொழுது இருந்த வெளியுறவு, உள்ளுறவு அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?

கிரீன்பீஸ் என்கிற பசுமை அமைப்பு பிரிட்டன் பத்திரிகை ஒன்றின் உதவியோடு துப்பறிந்து அந்தக் கொலைகார ஆண்டர்சன் அமெரிக்காவிலுள்ள லாங் ஐலேண்டு என்கிற இடத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதையும்... அவன் கோல்ப் விளையாட்டுக்கான ஒரு மாத செலவு மட்டுமே போபாலில் பலியான ஒரு குடும்பம் பெற்ற தொகையை விடவும் பலமடங்கு அதிகம்...எனவும் அம்பலப்படுத்தியது ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்னரே.

ஆனால் அதற்கெல்லாம் நமது பிரதமர்களுக்கு ஏது நேரம்? தேடப்படும் குற்றவாளியை இழுத்து வருவதா அவர்களுக்கு வேலை?

சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலையில் இன்னமும் விசாரிக்கப்படாமல் இருக்கிற.... இன்னமும் ‘தேடப்படுகிற’ டக்ளஸ் தேவானந்தாவோடு கியூபாவில் கை குலுக்கினாரே மன்மோகன் சிங்... அப்படி ஆண்டர்சனோடும் கை குலுக்காமல் இருப்பதற்காகவே ஒரு பாராட்டு விழா வைக்கலாம் நாம்.இப்படி எழுதோ எழுதென்று எழுதி, கிழியோ கிழியென்று கிழித்தாலும் யாருக்கு உரைக்கப் போகிறது?

ஜாலியன் வாலா பாக்கில் நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்ததற்குப் பழி தீர்க்க பல்லாண்டுகள் ஜெனரல் டயரைப் பின் தொடர்ந்து இறுதியாக லண்டன் நீதி மன்றத்தில் வைத்து சுட்டுக் கொன்றான் மாவீரன் உத்தம்சிங்.


ஆனால் பல்லாயிரம் பேரைப் பலிகொண்ட கொலைகார ஆண்டர்சனை சுட வேண்டாம்... ஆனால் குறைந்தபட்சம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூட கையாலாகாதவர்களாக இருக்கிறோம் நாம்.

ஏனென்றால் நாம் ஒரு போதும் உத்தம்சிங்குகள் அல்ல.

சகலமும் மழுங்கிப்போன மன்மோகன் சிங்குகள்!


எது வாழ்க்கை ?

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும்
தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய
மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும்
, வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக
அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின்
கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள்
ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்

எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்

தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர்
சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன்
கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.