Pages

Wednesday, June 16, 2010

"இதுவல்லவோ நீதி!’’



இரவு மணி 9: போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் கம்பெனியின் குழாய்களை தண்ணீரில் சுத்தம் செய்யும் பணி ஆரம்பமாகிறது.

இரவு மணி 10: சுத்தம் செய்யும் தண்ணீர் டேங்க் எண் 610 &ல் எதிர்பாராதவிதமாக நுழைய அது தன் வேலையைக் காட்டத் துவங்குகிறது.

இரவு மணி 10.30: உள்ளே நுழைந்த தண்ணீர் டேங்க்கில் இருந்த ரசாயனப் பொருட்களோடு கலந்து நச்சு வாயுவாக மாறி அது வெளியேறுவதற்காக வைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக வெளியேறத் துவங்குகிறது.

இரவு மணி 12.30: தொழிற்சாலையின் உள்ளே இருக்கும் அபாய சங்கு நீண்ட ஓலத்தை ஒலித்தபடி தனது மூச்சை நிறுத்திக் கொள்கிறது.

இரவு மணி 12.50: அபாய சங்கின் ஒலியைக் கேட்ட தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள்.

ஆனால் அது பற்றி எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போபால் நகரம்.

அவ்வளவுதான்......

அதன் பிறகு வந்த ஒவ்வொரு கணமும் கொடூரமானவை.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெதில் ஐசோ சயனைட் நச்சு வாயு நகரைச் சூழும்போது எல்லாமே கையை மீறிப் போயிருந்தது.

அந்த நச்சுப்புகையை மக்கள் சுவாசிக்கத் தொடங்கிய மறு நொடியே மூச்சுத்திணறலுக்கு ஆளாகிறார்கள்...

அடுத்து கடும் இருமலும் வாந்தியும் அவர்களைப் புரட்டி எடுக்கிறது...

கண்கள் தீயெனப் பற்றி எரிகின்றன எரிச்சலில்...

வீட்டுக்குள் மழலைகளோடு படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? என எதுவும் புரிபடாமல் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வருகிறார்கள்.

ஓட ஓட துரத்துகிறது நச்சுவாயு. ஓடியவர்கள் கும்பல் கும்பலாக செத்து விழுகிறார்கள் வீதிகளில்.

செத்து விழுந்தவர்கள் போக மற்றவர்கள் இரவு இரண்டு மணி வாக்கில் ஹமீதையா மருத்துவமனையை அடைய அங்கேயே பலபேருக்குப் பறிபோகிறது கண்பார்வை.

வாயில் நுரை தள்ளியவாறும், மூச்சுத் திணறியபடியும் குற்றுயிராகிப் போன ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகுதான் ஒலிக்க ஆரம்பிக்கிறது தொழிற்சாலைக்கு வெளியில் இருந்த அபாயச்சங்கு.

ஒருவழியாக காலை நாலு மணியளவில் நச்சுவாயு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இது நடந்தது டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி. ஆண்டு : 1984.

மறுநாள் காலை ஏழு மணிக்கு போலீசின் ஒலிபெருக்கிகள் ஒலிக்கின்றன : எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டன.

இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஆறு ஆண்டுகள்.

அது சரி... போலீசின் ஒலிபெருக்கிகள் சொன்னனவே ‘‘எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டன”

அந்த ‘எல்லாமே’ என்றால் எவையெவை?

அந்தக் கொடூரச் சம்பவம் நடந்த வேளையில் செத்து மண்ணோடு மண்ணாக சுண்ணாம்பாகி விழுந்தவர்கள் மட்டுமே இருபதாயிரம் பேருக்கு மேல்.

பல லட்சம் பேர் தீராத புற்றுநோய்க்கும், நுரையீரல் நோய்களுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

கண்பார்வை பறிபோனவர்கள் ஏராளமானோர்.

முதலில் ஓரிரு நாட்களுக்கு செத்தவர் போக மற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புதிதாக அனாதையாக்கப்பட்டவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன.

விதவைகள் ஆக்கப்பட்டவர்-களுக்கான பென்ஷன் மாதம் ரூ 200/-& அளிக்க உத்தரவிடப்பட்டது. பிற்பாடு ‘பெரிய மனசு’ பண்ணி அது 750/- ஆக உயர்த்தித் தரப்பட்டது.

மாத வருமானம் 500 ரூபாய்க்குள் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ‘நிவாரணம்’ ஆக 1500 ரூபாயை அள்ளி வழங்கியது அரசு.

அதுவும் “சந்தேகத்துக்கு இடமின்றி விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்தான்” என்று மருத்துவரிடம் கியூவில் நின்று சான்றிதழ் வாங்கி வந்தவர்களுக்கு.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் பாதிக்கப்பட்டதாக ஒருவர்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல்.

1984-ல் நடந்த இந்தக் கொடூரத்துக்கு ஆறு ஆண்டுகள் கழித்து விபத்துக்கு முன் பிறந்தவர்களுக்கு இடைக்கால ‘நிவாரணத் தொகை’யாக 200 ரூபாயை வாரி வழங்கினார்கள் வள்ளல்கள். அதுவும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகு. இறந்தவர்கள் போக விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறுதி இழப்பீடாக 25,000 ரூபாயையும்... விஞ்ஞானத்தின் ‘வளர்ச்சிக்காக’ தங்கள் உயிரை ‘அர்ப்பணித்து’க் கொண்டவர்களின் குடும்பத்துக்கு 62000 ரூபாயையும் கருணை உள்ளத்தோடு அளித்தார்கள்.

இந்தக் கொடூரத்தைக் கண்டு கோபம் கொண்டு போபால் நகரையே ஒரு “ஞிவீsஜீஷீsணீதீறீமீ சிவீtஹ்” என்று எழுதினார் தமிழகத்தின் இலக்கியவாதியும் மனித உரிமை ஆர்வலருமான நண்பர் நாகார்ஜுனன்.

ஆம்.

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தேநீர்க் குவளைகளைப் போல...

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஊசி போடும் சிரிஞ்சுகளைப் போல...

போபால் நகரமும் பயன்படுத்திவிட்டு குப்பைக் கூடையில் வீசப்பட்ட ஒரு நகரம்தான்.

இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஞ்ஞான பலிகளுக்கான ‘தீர்ப்புதான்’ இந்த வாரம் ஆற அமர வந்திருக்கிறது.

வந்த அந்தத் தீர்ப்பும் இந்தத் திருப்பலிகளுக்குக் காரணமானவர்களைக் ‘கொடூரமாக’ தண்டித்து ‘நீதியை’ நிலை நாட்டி இருக்கிறது.

இருபதாயிரம் பேருக்கு மேல் சாகடிக்கப்-படுவதற்கும்...

ஐந்து லட்சம் பேருக்கு மேல் நிரந்தர நோயாளிகளாக ஆக்கப்பட்டதற்கும்...

730 நாட்கள் ‘கடும் தண்டனை’ அளித்து தீர்ப்பு வழங்கியதோடு ஜாமீனும் வழங்கியிருக்கிறார் ‘கனம் மாஜிஸ்ட்ரேட்’ அவர்கள்.

அதுவும் அன்றைக்கு யூனியன் கார்பைட் கம்பெனியின் தலைவராக இருந்த... இத்தனை லட்சம் பேரை நடைபிணமாக்கிய... வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாமல்!

இதுவல்லவோ நீதி!

1984 தொடங்கி 2010 வரைக்கும் துப்புக்கெட்ட இந்த இந்திய அரசும் மானம் கெட்ட அமெரிக்க அரசும் சேர்ந்து தேடோ தேடென்று தேடுகிறார்களாம் அந்த ஆண்டர்சனை.

இருபத்தி ஆறு ஆண்டு-களுக்கு முன்னர் கைதான ஆண்டர்சனை ஆறே மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை செய்து தனி ஜெட் விமானத்தில் வழியனுப்பி வைத்தவர்கள் யார்? அப்பொழுது இருந்த வெளியுறவு, உள்ளுறவு அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?

கிரீன்பீஸ் என்கிற பசுமை அமைப்பு பிரிட்டன் பத்திரிகை ஒன்றின் உதவியோடு துப்பறிந்து அந்தக் கொலைகார ஆண்டர்சன் அமெரிக்காவிலுள்ள லாங் ஐலேண்டு என்கிற இடத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதையும்... அவன் கோல்ப் விளையாட்டுக்கான ஒரு மாத செலவு மட்டுமே போபாலில் பலியான ஒரு குடும்பம் பெற்ற தொகையை விடவும் பலமடங்கு அதிகம்...எனவும் அம்பலப்படுத்தியது ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்னரே.

ஆனால் அதற்கெல்லாம் நமது பிரதமர்களுக்கு ஏது நேரம்? தேடப்படும் குற்றவாளியை இழுத்து வருவதா அவர்களுக்கு வேலை?

சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலையில் இன்னமும் விசாரிக்கப்படாமல் இருக்கிற.... இன்னமும் ‘தேடப்படுகிற’ டக்ளஸ் தேவானந்தாவோடு கியூபாவில் கை குலுக்கினாரே மன்மோகன் சிங்... அப்படி ஆண்டர்சனோடும் கை குலுக்காமல் இருப்பதற்காகவே ஒரு பாராட்டு விழா வைக்கலாம் நாம்.இப்படி எழுதோ எழுதென்று எழுதி, கிழியோ கிழியென்று கிழித்தாலும் யாருக்கு உரைக்கப் போகிறது?

ஜாலியன் வாலா பாக்கில் நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்ததற்குப் பழி தீர்க்க பல்லாண்டுகள் ஜெனரல் டயரைப் பின் தொடர்ந்து இறுதியாக லண்டன் நீதி மன்றத்தில் வைத்து சுட்டுக் கொன்றான் மாவீரன் உத்தம்சிங்.


ஆனால் பல்லாயிரம் பேரைப் பலிகொண்ட கொலைகார ஆண்டர்சனை சுட வேண்டாம்... ஆனால் குறைந்தபட்சம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூட கையாலாகாதவர்களாக இருக்கிறோம் நாம்.

ஏனென்றால் நாம் ஒரு போதும் உத்தம்சிங்குகள் அல்ல.

சகலமும் மழுங்கிப்போன மன்மோகன் சிங்குகள்!


எது வாழ்க்கை ?

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும்
தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய
மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும்
, வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக
அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின்
கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள்
ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்

எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்

தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர்
சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன்
கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.