Pages

Wednesday, December 17, 2008

பசுவின் சிறுநீர்

பசுவின் சிறுநீரைப் பாட்டில்களில் அடைத்து ஐந்நூறு மிலி ஐம்பது ரூபாய்க்கு விற்கின்றனராம்.பசுவின் சிறுநீர் தினமும் ஐந்நூறு மிலி குடித்து வந்தால் உடல் முழு பலத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்குமாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் ஆரோக்கியத்துடன் வாழ பசு சிறுநீர் உறுதுணையாய் இருக்கும்.சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை பசு சிறுநீர் குடிப்பதால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமாம்.அதே போல நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகளையும் தீர்த்து வைக்கும் திற பெற்றதாம் இந்த பசு சிறுநீர்.நமது உடலில் உள்ள செல்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும் திறன் பெற்றதாம் இந்த பசு சிறுநீர்.பசுவின் சிறுநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்று வேறு சில அமைப்புகள் கூட பிரசாரம் செய்து வருகின்றனவாம்.அரசு ஆதரவோ, உதவியோ இதற்கு இதுவரை கிடைக்கவில்லையாம்.அதே போல பசு சிறுநீரை அப்படியே குடித்து விடக் கூடாதாம்.பசுவின் சிறுநீரை சேகரித்து, சூடாக்கி சுத்திகரித்து, அதன் மருத்துவ குணம் மாறாமல் பாட்டிலில் அடைத்து இவர்கள் விற்பார்களாம்.இவர்களிடம் வாங்கிக் குடிக்க வேண்டுமாம், அப்போதுதான் அது உடல் நலத்திற்கு நல்லதாம் (யார் உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லவே இல்லை, ஒரு வேளை விற்பவருக்கு நல்லது போல)மைசூரைச் சேர்ந்த மைசூரு பிஞ்சாரேபோல் சொசைட்டி அமைப்பு இப்போது இந்த விற்பனையைத் தொடங்கியுள்ளதாம்.மைசூரில் தினமும் 15 பாட்டில்கள் பசு சிறுநீர் விற்பனை ஆகிறதாம்.இது போன்ற செய்திகளை வெளியிட்டு தமிழர்களிடம் மூட நம்பிக்கையைப் பரப்புவதே தனது குறிக்கோள் என்பதைப் போல செயல்படும் தினமலர் இதழ்தான் இந்த செய்தியையும் வெளியிட்டு உள்ளது.ஏற்கனவே கழுதைப் பாலைக் குடித்தால் குழந்தைகளுக்கு நல்லது, பெரியவர்களுக்கு நல்லது என்று ஒரு கதையைக் கிளப்பி தமிழகத்தின் குக்கிராமங்கள் தொடங்கி சென்னை வரை அந்த செய்தி பரவி எல்லோரும் கழுதையத் தேடி அலைந்தனர்.இப்போது இந்தக் கதை வேறு, இதற்கு இன்னும் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றனவோ.இது போன்ற செய்திகளைப் பரப்புபவர்கள் மீது நாம் வருத்தப்படுவதை விட யார் எதைக் கூறினாலும் அதை அப்படியே நம்பி அதைச் செய்ய முயலும் நமது மக்களின் மனநிலை மனநிலை மாற என்ன வழி என்பதை யோசிக்க வேண்டும்.எந்த ஆதாரமும் இல்லாமல் இது போன்ற செய்திகளை வெளியிட்டு மக்களை தவறான வழிகளில் வழிநடத்த முயல்வது ஏனோ?தினமும் 50 ரூபாய் குடுத்து 500 மிலி பசு சிறுநீரை வாங்கிக் குடித்து வருவது எல்லாராலும் செய்ய இயலுமா? (500 மிலி பாலின் விலை 10 க்குள்தான்,)இதனால் வேறு ஏதாவது தவறான பின்விளைவுகள் ஏற்பட்டுப் போனால் அந்த விளைவுகளுக்கு இவர்கள்தானே பொறுப்பு.இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிடும் இவர்கள்,தமிழகத்தில் எத்தனை ஏழை விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு உரிய விளம்பரமும் கிடைக்காமல் அதனால் அதற்குரிய பலன்களை அடையாமல் தவிக்கிறார்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட முடியாதா?தமிழகத்தில் எத்தனை ஏழைப் பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர், அந்தப் பொருட்களின் விற்பனைக்கு உதவலாமே?எத்தனையோ ஏழைகள் நோயாளிகளாக அமருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர் அவர்கள் பற்றி செய்திகள் வெளியிட்டு அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வழி செய்யலாமே?தங்களிடம் உள்ள பத்திரிகை என்னும் ஆயுதத்தை வைத்து மக்களுக்கு இயன்ற அளவு நன்மைகள் செய்ய முயற்சிப்பதே பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிக்கையின் முக்கியக் கடமை.அதைச் செய்ய மனம் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் இது போன்ற மூட நம்பிக்கை பரப்பும் செய்திகள் அல்லது அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதையாவது தவிர்க்கலாமே...............

No comments:

Post a Comment