ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!
மேலை நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ஆண்கள் அழகு நிலையங்கள் பெருகி வருகின்றன. பெண்கள் மட்டுமல்லாமல் தாங்களும் அழகை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று பரவலாக ஆண்களிடம் தோன்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுபோல, மணமகனுக்கும் இந்நாளில் அலங்காரம் செய்கிறார்கள். பெண்ணைப் போல் ஆண்களுக்கு நகைகளோ, அதிக மேக்கப்போ வேண்டியதில்லை. பிளீச்சிங், ஃபேஷியல், தலைமுடி, மீசை ஆகியவற்றை ‘டிரிம்’ செய்தல், கால்களைச் சுத்தம் செய்யும் பெடிக்யூர் போன்ற பயிற்சிகள் செய்தல், தலைமுடியை ‘ஷாம்பூ’ இட்டு முடியை அவரவர் முகத்திற்கேற்றவாறு ‘செட்’ செய்தல் ஆகியவற்றோடு லேசாக மேக்கப் இட்டுத் தயார் செய்துவிடுகிறார்கள்.
இன்று பெண்களைப் போல் ஆண்களும் மாதம் ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று வருகிறார்கள்.
அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்
யோகாசனப் பயிற்சிகளும், ‘மெடிட்டேஷன்’ எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ‘யோகாசனம்’ ஒரு வரப்பிரசாதமாகும்.
சிலு முக்கிய ஆசனங்களையும் அவற்றால் ஏற்படும் பலன்களையும் கீழே காண்போம்.
பத்மாசனம்:நேராக நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து, இடக்காலை வலத்தொடையின் மீது, வலக்காலை இடத்தொடையின் மீதும் வைத்து, நேராக நிமிர்ந்து உட்காரவும், பத்மாசனத்தில் தினம் உட்கார்ந்து பழகினால் எளிதாகிவிடும். இதனால் கூன் முதுகு நேராகும். இடுப்பு நோய் தீர்ந்து, புத்திக்கூர்மை உண்டாகும். முழங்கால்களில் ஏற்படும் வலி தீரும்.
பஸ்ச்சிமோத்தாசனம்:இருகால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து இரு கைகளையும் மேலே உயர்த்த வேண்டும். பின் மெதுவாக மூச்சை இழுத்து, மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே கை விரல்களால் கால் கட்டை விரல்களைத் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்யும்போது, வயிற்றைச் சற்று உள்ளுக்கிழுத்து முன்புறமாய்க் குனிந்து, இரு கால்களின் கட்டை விரல்களைச் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முழங்காலை மடக்க வேண்டாம். முழங்காலில் தலைபடுமாறு இருத்தல் நலம். இம்மாதிரி 3 நிமிடங்கள் இருக்கலாம். வயிற்றிலுள்ள அதிகப்படியாக சதைகள் குறைக்கப்பட்டு வயிறு, இடுப்புப் பகுதிகள் அழகாய்த் தோற்றமளிக்கும்.
தனுராசனம்:படுத்துக் கொண்டு இரு கால்களையும், முழங்கால்களுக்கு மேலுள்ள பாகத்தையும் மடித்து இருகைகளையும் நேராக நீட்டிக் கால்களின் மணிக்கட்டுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்துக் தலையைத் தரையிலிருந்த தூக்கி நேராகப் பார்க்கவும். நிதானமாய் மூச்சு விடவும். இப்பயிற்சியை 5 தடவை செய்யலாம்.
அட்ரினல், தைராய்டு, பிட்யூட்டரி சம்பந்தப்பட்ட சுரப்பிகளைச் சரிவர இயங்கச் செய்யும் இந்த ஆசனம் புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, நீரிழிவு நோயையும் குணமாக்கும்.
சிரசாசனம்:மிருதுவான போர்வையின் மேல் மெல்லிய மெத்தையை விரித்து, கைகளை ஆதரவாய் வைத்து, உடம்பைச் சிறிது சிறிதாக மேலே தூக்க வேண்டும். இடுப்புவரை உயர்த்தி பின், கால்களை மேலே உயரத்தூக்க வேண்டும். 15 செகண்டுகள் இந்த ஆசனத்தில் இருக்கலாம்.மூளையைச் சுறுசுறுப்பாக்கக் கூடியதும் மனத்திலே தெளிவையும், அமைதியையும் ஏற்படுத்தக்கூடியதுமான இந்த ஆசனத்தை இருதய நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.
சக்ராசனம்:உடம்பின் முழுப் பாரத்தையும் கைகள் மேலும், கால்கள் மேலும் வைத்து, இடுப்பு, வயிறு ஆகியவற்றை வளைத்துக் கைகளைத் தரையில் ஊன்ற வேண்டும். உள்ளங்கால்கள் தரையில் நன்கு ஊன்றப்பட்டிருக்க வேண்டும். மெதுவாகச் சுவாசம் செய்து முடித்துப் பழைய நிலைக்கு வரவும்.
இதனால் கண் பார்வை நன்கு தெரியும். உடலுக்கும், சருமப் பளபளப்பிற்கும் ஏற்ற ஆசனம்; இது மூச்சுவிட முடியாமல் இருப்பவர்களுக்கு ஏற்ற ஆசனம்.
வஜ்ராசனம்:இருகால்களையும் மடக்கி உட்கார்ந்து, பின்புறங்கள் இருகுதிகால்களின் மேல் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் மூன்று முதல் 5 நிமிடம் வரை இருக்கலாம்.
இதன் மூலம் வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியன சரியாகும். முதுகுத் தண்டுவடம் பலப்படும். அஜீரணம் ஏற்படும் போது இந்த ஆசனத்தைச் செய்வது நல்லது.
விபரீத கரணி:நேராகப் படுத்து, கால்களிரண்டையும் 90 டிகிரிக்கு நேர் மேலாக மெதுவாக நேரே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டே இரண்டு கைகளால் பக்கவாட்டில் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இம்மாதிரி 10 தடவை செய்யலாம்.
இந்த ஆசனம் மூலம் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கலாம்.
அழகுக்கூடும்..
No comments:
Post a Comment